அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் குருவாயூரப்பன் பள்ளி மாணவி தன்யாஸ்ரீ முதலிடம்
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடந்தது. போட்டிகள் தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி, காந்தியச் சிந்தனைகள் ஆகிய 3 தலைப்புகளில் நடந்தது. காலையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் மங்கலம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 29 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமையாக, பல்வேறு சம்பவங்களை சொல்லி பேசினர். தமிழ் ஆசிரியர்கள் கோடங்கிபாளையம் பள்ளி கணேசன், இடுவாய் பள்ளி ரமேஷ்குமார், கருவம்பாளையம் பள்ளி சரவணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் வ.சுந்தர் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார். போட்டியின் முடிவில் காளிபாளையம், குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி தன்யாஸ்ரீ முதலிடம் பெற்றார். இவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பல்லடம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி வைஷ்ணவலட்சுமி 2 ஆம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.3 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. உடுமலை, பெதப்பம்பட்டி இலுப்பன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி இனியா மூன்றாம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளான மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி முன்ஷிஃபா, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி காவ்யஸ்ரீ ஆகியோருக்கு தலா 2000 ற்கான காசோலை சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சி துறை அலுவலர்கள் மணிமேகலை, மேரி, பாஷா ஆகியோர் செய்து இருந்தனர். மதியம் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. நாளை (7 ந் தேதி) பண்டிட் ஜவஹர்லால் நேரு குறித்த பேச்சு போட்டிகள் நடக்கிறது.
Read More
06-01-2026 04:02 PM
Share